தஞ்சை தமிழன்..

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks blogger tips and facebook tricks ...http://www.robinsheam.blogspot.com/

Friday, February 21, 2014

தஞ்சை பாலயல் குற்றத்திற்கு 10 ஆண்டு சிறை..

அன்பு நண்பா;;:
குழந்தைகள் மீதான பாலியல் குற்றத்துக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை: கலெக்டர் பேச்சு.

தஞ்சாவூர் ரெயில் நிலையத்தின் முன்பு நடைபெற்ற பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு பேரணி தொடக்கவிழா நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் என்.சுப்பையன் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்து பேசியதாவது:–

குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை தடுத்து நிறுத்திடும் வகையில் 2012 ம் ஆண்டு பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் கொண்டுவரப்பட்டது. பாதிக்கப்பட்ட குழந்தைகள் காவல் நிலையம் சென்று புகார் அளிக்காதது குற்றவாளிகள் தப்பித்திட ஏதுவாக இருக்கின்றது. இச்சட்டத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இச்சட்டத்தினை பொதுமக்களும் குழந்தைகளும் அறிந்திடும் வகையில் இப்பேரணி நடத்தப்படுகிறது. குழந்தையின் விவர அறிக்கையானது அவர் வசிக்கும் உறைவிடத்தில் அல்லது அவரது விருப்பத்திற்குரிய இடத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.

அது ஒரு துணை காவல் ஆய்வாளரின் படி நிலைக்கு குறையாத பெண் காவல் அலுவலரால் பதிவு செய்யப்பட வேண்டும். அப்போது காவல் அலுவலர் சீருடையில் இருக்கக் கூடாது. எக்காரணத்தின் பேரிலும் குழந்தையை இரவு நேரத்தில் காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்தல் கூடாது. குழந்தையின் விவர அறிக்கையானது அக்குழந்தை கூறியவாறு பதிவு செய்யப்பட வேண்டும். அந்த விவர அறிக்கையானது பெற்றோர் (அல்லது) காப்பாளர் போன்றோர்களின் முன்னிலையில் பதிவு செய்யப்பட வேண்டும். தேவைப்படும் போது வல்லுநரின் உதவியை நாட வேண்டும்.

பாதிக்கப்பட்ட நபர் பெண் குழந்தையாக இருக்கும் வேளையில் மருத்துவ ஆய்வானது பெற்றோர்களின் முன்னிலையில் ஒரு பெண் மருத்துவரால் நடத்தப்பட வேண்டும். வழக்கின் விசாரணையின் போது சிறப்பு நீதிமன்றம் அடிக்கடி இடை நிறுத்தங்களை அனுமதிக்கலாம்.

நீதிமன்றத்தில் சாட்சியளிக்க திரும்ப திரும்ப அழைக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கடுமையான வினா தொடுப்பதை அல்லது குழந்தையின் பண்பு நலனை பழிப்பதை நீதிமன்றம் அனுமதிக்கக் கூடாது. வழக்கு விசாரணை தனி அறையில் பெற்றோர் மற்றும் பாதுகாவலர் முன்னிலையில் நடத்தப்பட வேண்டும்.

பாலியல் குற்றத்தை விசாரிப்பதற்கு சிறப்பு நீதி மன்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட குழந்தையும், பாதிப்புக்குள்ளாகிய நபரும் சந்திக்காத வகையில் சிறப்பு நீதிமன்றங்கள் செயல்படும். இக்குற்றத்தை புரிந்தவருக்கு பிணை ஆணை (ஜாமீன்) கிடையாது. குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் ஆயுட்காலம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

அரசுத் துறையில் பணி புரிவோர் இக்குற்றத்தை புரிந்தால் 5 முதல் 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து தண்டிக்கப்படுவர். குற்றத்திற்கு உடந்தையாக இருப்பவர்களுக்கு அக்குற்றத்திற்கு வழங்கப்படும் தண்டனை அளவில் பாதி தண்டனை மற்றும் அபராதம் விதித்து தண்டிக்கப்படுவர்.

இவ்வாறு அவர் பேசினார்.

இப்பேரணி ஆற்றுபாலம், அண்ணாசிலை, கீழ ராஜவீதி வழியாக அரண்மனை சங்கீதம் மஹாலை சென்றடைந்தது. இதில் காவல்துறை கண்காணிப்பாளர் தர்மராஜன், நீதித்துறை நடுவர் கார்த்திகா மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

No comments: